இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப் பட்டதால் ஜம்மு காஷ்மீர், லடாக்கில் கல்வி, சுகாதார வசதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதி்வு: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில்தான், இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35(ஏ) ஆகிய பிரிவுகள் வரலாறாக மாறின. இது ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பயணத்தில் ஒரு தீர்க்கமான புதிய அத்தியாயம்.
அன்றிலிருந்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு விரிவடைந்துள்ளதுடன், கல்வி, சுகாதாரம், தொழில் முனைவோர் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் வாய்ப்புகள் வளர்ச்சியடைந்துள்ளன. பெண்கள், விளிம்புநிலை சமூகத்தினர் பல ஆண்டுகளாகத் தங்கள் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை இழந்திருந்தவர்கள், அதிகாரம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இந்த ஆண்டில்தான் நமது நாடு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் மீதான அவரது வாழ்நாள் அர்ப்பணிப்பு தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. பல தசாப்தங்களுக்கு முன்பு அவர் எதை கற்பனை செய்தாரோ, அது ஆகஸ்ட் 5, 2019 அன்று வரலாற்று ரீதியாக நிறைவேறியது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தங்கள் லட்சியங்களைத் தொடரவும், வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்குப் பங்களிக்கவும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
