பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10-வது நாளாகநேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை.இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாளை வயநாடு செல்கிறார். சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார்.பிரதமர் மோடியின் வருகை மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தெரிகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 14 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நிவாரண முகாம்களுக்கு ஏராளமானோர் உணவு பொருட்கள், ஆடைகளை அனுப்பி வைத்துள்ளனர். அதற்காக அரசு சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். போதுமான உணவு, ஆடைகள் இருப்பதால் இனிமேல் நிவாரண உதவிகளை அனுப்ப வேண்டாம்.
மீட்கப்பட்ட உடல்கள் மற்றும் உடல் பாகங்களின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஏராளமான உடல்கள் சிதைந்துள்ளன. எனவே மரபணு சோதனைநடத்தப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவடைந்த பிறகே முழுமையான உயிரிழப்பு விவரம் தெரியவரும். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கினை பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கு இன்றுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், ஷியாம் குமார் வழக்கை விசாரிக்க உள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து கேரள அரசிடம் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே விளக்கம் கோரி உள்ளது. மேலும் கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கை உட்பட பல்வேறு கமிட்டிகளின் ஆய்வு அறிக்கைகள், விசாரணையின்போது அலசி ஆராயப்படும் என்று உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.