ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்தடுத்த ஒலிம்பிக் தொடர்களில் பதக்கம் வென்று சாதனை புரிந்ததன் பின்ன்னணியில் பெரிய அளவில் கடின உழைப்பும், உடல் மன உறுதியும், அரிய மூளை உழைப்பும் உள்ளதை மறுக்க முடியாது. அனைத்துக்கும் மேலாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ், ‘The Great Wall of India’. இவர் மகுடத்துடன் ஓய்வு பெற்றுவிட்டார். இனி இவர் இடத்துக்கு வருபவர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது அத்தனை சுலபமல்ல என்ற ஓர் இடத்தைக் காலியாக விட்டுச் சென்றுள்ளார் அல்லது அவரது நினைவாக விட்டுச் சென்றுள்ளார்.
இது ஹாக்கியில் இந்திய அணியின் 13வது ஒலிம்பிக் பதக்கம், 4வது வெண்கலம். 1968 மெக்சிகோ சிட்டி ஒலிம்பிக்ஸ் மற்றும் 1972 மியூனிக் ஒலிம்பிக்ஸை தொடர்ந்து தற்போது 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடர்ந்து பதக்கங்களை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.
இந்த இந்திய ஹாக்கி அணியின் கபில்தேவ் என்று கேப்டன் ஹர்மன் பிரீத்தை வர்ணிப்பது தகும். கபில் தேவ் போன்று மனத்தில் ஆக்ரோஷம், வெற்றிக்கான உந்துதல், ஆனால் வெளியே சர்வசாதாரணமாக, சர்வசகஜமான உடல்மொழியுடன் விளையாடியது இவரை ஹாக்கியின் கபில்தேவ் என்று அழைக்கத் தோன்றுகிறது. நேற்று வெண்கல போட்டியில் அவர் அடித்த இரண்டு ட்ராக் பிளிக் ஷாட்கள் அதியற்புதத்தின் உச்சம். 10 கோல்களை இந்த தொடரில் அவர் அடித்துள்ளார்.