பாலியல் வழக்கில் தலைமறைவாக உள்ள‌ பிரஜ்வல் ரேவண்ணா இன்று நாடு திரும்புகிறார்: கைது செய்ய போலீஸார் தீவிரம்

0
113

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌.

ஒரு மாதம் தலைமறைவு: இதனிடையே கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இரவு பிரஜ்வல் ஜெர்மனிக்கு தப்பியோடினார். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் 2 முறை லுக் அவுட் நோட்டீஸும் ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸும் பிறப்பித்தனர். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதினர். இதனிடையே, தேவகவுடா உள்ளிட்டோர் உடனடியாக நாடு திரும்புமாறு பிரஜ்வலுக்கு கோரிக்கை விடுத்தனர்.

நள்ளிரவு நாடு திரும்புகிறார்: இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா இரு தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பிரஜ்வல் ஜெர்மனியின் முனிச் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்துசேரும் லுஃப்தான்சா விமானத்தில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த டிக்கெட்டின் நகல் ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் பெங்களூரு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் வந்திறங்கியதும் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய முடிவெடுத்திருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் முன் ஜாமீன் கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனஞ்செய், ‘‘இந்த மனுவை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என கோரினார்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி, மே 31-ம் தேதி வழக்கை விசாரிப்பதாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here