குழந்தைகளை சட்டவிரோதமாக விற்ற கும்பலைச் சேர்ந்த 8 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். வளர்ப்பு பெற்றோரிடமிருந்து 16 குழந்தைகளை மீட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹைதராபாத் ராச்சகொண்டா போலீஸ் ஆணையர் தருண் ஜோஷி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபிர்ஜாதி கூடா பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆர்எம்பி டாக்டர் ஷோபா ராணி, ஒரு பெண் சிசுவை ரூ. 4.5 லட்சத்துக்கு வேறொரு தம்பதியினருக்கு தரகர்மூலம் சட்டவிரோதமாக விற்றுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் டாக்டர் ஷோபா ராணி மற்றும் மேலும் இருவரை மேடிபல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் தெரியவந்தன.
டெல்லி, புனே நகரங்களில் வசிக்கும் ஏழை குடும்பத்தினர் வறுமைகாரணமாக, பிறந்து சில நாட்களோ அல்லது மாதங்களோ ஆன குழந்தைகளை தரகர்களிடம் விற்று விடுகின்றனர். அல்லது தரகர்கள், அவர்களின் உதவியாளர்கள் ஆகியோர் அந்த ஏழை தம்பதியினரிடம் சென்று, பணத்தாசை காட்டிஅந்த குழந்தையை ஹைதராபாத்துக்கு கொண்டு வந்து விடுகின்றனர். அதன் பின்னர், இங்குள்ள தரகர் மூலம் குழந்தை இல்லா தம்பதியினருக்கு அதிக விலைக்கு விற்று விடுகின்றனர். ஒருவேளை குழந்தைகள் கிடைக்காவிடில், மருத்துவமனைகளில் குழந்தை களை திருடிக் கொண்டு வந்து இங்கு விற்று விடுகின்றனர்.
அப்படி குழந்தைகளை விற்கும் கும்பலைச் சேர்ந்த 2 பேரை முதலில் கைது செய்து விசாரணை நடத்தினோம். அவர்கள் கூறிய தகவலின்படி மேலும் 6 பேரை கைது செய்துள்ளோம்.
அவர்கள் இதுவரை விற்ற 16 குழந்தைகளை வளர்ப்பு பெற்றோரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளோம். இது சட்டப்படி குற்றமாகும். ஒரு குழந்தையை வளர்க்க வேண்டுமானால், அதனைசட்டப்படி தத்தெடுக்க வேண்டும். ஆனால், இப்படி குறுக்கு வழியில் தரகர்களிடம் குழந்தைகளை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5.5 லட்சம் வரை கொடுத்து வாங்கினால் செல்லாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வளர்ப்பு பெற்றோர் கண்ணீர்: இதுகுறித்து வளர்ப்பு பெற்றோர் கூறும்போது, ‘‘எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதேநேரம் அரசு அனாதை இல்லங்களில் வளரும் குழந்தைகளை தத்தெடுக்க பெரும் அவதிப்பட வேண்டி உள்ளது.
இதனால்தான் நாங்கள் குழந்தைகளை தரகர்களிடம் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டோம். நாங்கள் அக்குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்துள்ளோம். அவர்கள் இன்றி எங்களால் வாழ இயலாது. தயவு செய்து புரிந்து கொண்டு, எங்களின் குழந்தைகளை எங்களிடமே சட்டப்படி ஒப்படைக்க வேண்டும்’’ எனக் கூறி கதறி அழுதனர்.
பெண் குழந்தைகள்: இவர்கள் அழுவதைப் பார்த்து, இவர்கள் வளர்த்த குழந்தைகளும் (பெரும்பாலும் பெண் குழந்தைகளே) தேம்பித் தேம்பி அழுதன. இதனை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.