பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு சவாலாகும் மக்களவைத் தேர்தல்

0
49

மக்களவைத் தேர்தலில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவுகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட காரணங்களால் ஆளும் ஆம் ஆத்மிக்கு இத்தேர்தல் சவாலாகியுள்ளது.

பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பஞ்சாபில் கடந்த 2022 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பறித்தது.

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணி அமைத்த போதிலும் பஞ்சாபில் தனித்து போட்டியிடுகின்றன. இவற்றுடன் சுமார் 28 வருடங்களாக ஒன்றாக போட்டியிட்ட சிரோமணி அகாலி தளமும் (எஸ்ஏடி) பாஜகவும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன.

உ.பி. முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இங்கு தனித்து போட்டியிடுகிறது. சிம்ரஞ்சித் சிங் மான் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியும் தனது வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் நிறுத்தியுள்ளது. இக்கட்சிகள் தவிர, காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் உள்ளிட்டோர் சுயேச்சையாகவும் மோதுகின்றனர். மாயாவதி மற்றும் சிம்ரஞ்சித் மான் கட்சிகளுக்கு பஞ்சாபில் சில தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது.

காங்கிரஸ், எஸ்ஏடி ஆகிய கட்சிகளின் ஆட்சியால் பஞ்சாப்வாசிகள் சோர்வடைந்து புதிய கட்சியான ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்திருந்தனர்.

சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்த இந்த ஆதரவு மக்களவை தேர்தலிலும் கிடைக்கும் என ஆம் ஆத்மி நம்புகிறது. ஆனால் அக்கட்சி ஆளும் டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மதுபான ஊழலில் சிக்கியது தலைவலியாகி விட்டது.

நிறைவேற்றாத வாக்குறுதிகள்: மேலும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிஅளித்த சில முக்கிய வாக்குறுதிகளை பக்வந்த் சிங் மான் அரசுநிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ட ஆதரவுவிலை (எம்எஸ்பி), பெண்களுக்குமாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை போன்றவை நிறைவேற்றப்படவில்லை.

பஞ்சாபின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தது. இந்த தேர்தலில் விவசாயிகள் கடன் தள்ளுபடி,எம்எஸ்பி உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. இதனால்காங்கிரஸுக்கு ஆதரவாக பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். இச்சூழல், ஆம் ஆத்மியை அச்சுறுத்துகிறது. இதற்கிடையில் மத்தியில் மூன்றாவது முறையாக தங்கள் ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையை பாஜக பஞ்சாபில் முன்னிறுத்துகிறது. இதுபோன்ற காரணங்களால் இத்தேர்தல் ஆம் ஆத்மிக்கு சவாலாகியுள்ளது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக-எஸ்ஏடி கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது. இதில் காங்கிரஸுக்கு 41% வாக்கு களுடன் 8 தொகுதிகளும் ஆம் ஆத்மிக்கு 7% வாக்குகளுடன் ஒரு தொகுதியும் கிடைத்தன.

பாஜகவுக்கு 9% வாக்குகளுடன் 2 தொகுதிகளும், அதன் கூட்டணிக் கட்சியான எஸ்ஏடி-க்கு 28% வாக்குகளுடன் 2 தொகுதிகளும் கிடைத்தன. எனவே பஞ்சாபில் பலமுனைப் போட்டி நிலவினால் இந்த 4 கட்சிகளிடையே முக்கியப் போட்டி நிலவுகிறது.

மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெறும் வெற்றி, அடுத்து 2027-ல் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு அடித்தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here