பாமக சார்பில் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

0
352

பாமக சார்பில் 11-ம் தேதி நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு பெருவிழாவுக்கு தடைகோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த மாநாட்டுக்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா திருவிடந்தை நித்தியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 18 ஏக்கர் நிலத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பி்ல் மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு தடைவிதிக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘‘சி்த்ரா பவுர்ணமி நாளில் பாமக நடத்தும் இந்த மாநாட்டின் காரணமாக கோயி்ல்களுக்குச் செல்லும் பக்தர்கள் பாதிக்கப்படுவர் என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கலவரங்களைக் கருத்தில் கொண்டு இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’’ எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.மாலா, ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அப்துல் முபீன், ‘மாநாடு நடைபெறும் நாளில் கிழக்கு கடற்கரை சாலையை யாரும் பயன்படுத்த வேண்டாம்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய வீடியோவை நீதிபதிகளிடம் காண்பித்தார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ‘‘இந்த மாநாட்டுக்கு 47 கடும் நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, ‘‘காவல்துறை விதித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படும். எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் மாநாடு நடத்தப்படும்’’ என உறுதியளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘‘பாமகவின் இந்த மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்படும் என பாமக தரப்பில் வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாநாட்டுக்கு வருகை தருவோர் எவ்வித ஆயுதங்களையும் எடுத்துவரக்கூடாது.

முன்அனுமதி பெற்ற வாகனங்களையே போலீஸார் அனுமதிக்க வேண்டும். எந்தவொரு சட்டம் – ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காத வகையில் கூடுதல் போலீஸாரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். பாமகவின் இந்த மாநாடும், சித்ரா பவுர்ணமி விழாவும் அமைதியான முறையில் நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் நிபந்தனைகளை விதிக்கலாம்’’, என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மற்றொரு வழக்கும் தள்ளுபடி: இதேபோல பாமகவின் சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாட்டுக்கு தடை கோரி வடநெமிலி பஞ்சாயத்து தலைவரான பொன்னுரங்கம் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ‘‘கடந்த 2013-ம் ஆண்டு பாமக, வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய சித்திரை முழுநிலவு பெருவிழாவின்போது மரக்காணத்தில் சாதிக்கலவரம் ஏற்பட்டு பட்டியலின மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

அந்த கலவரத்தில் 4 பேர் இறந்தனர். அதன்பிறகு சித்திரை முழுநிலவு கூட்டத்துக்கு அரசு அனுமதி வழங்குவதில்லை. இந்நிலையில் தற்போது நடைபெறும் பாமக மாநாடு காரணமாக வடநெமிலி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அத்துடன் பொது அமைதி மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உள்ளதால் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி எல். விக்டோரியா கவுரி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், ‘‘பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ‘‘ஏற்கெனவே இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தடை கோரிய மனுவை ஏற்க முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here