சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

0
288

தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், மெட்ரிக். பள்ளிகள் இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த இரணியன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாட்டில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில், 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் கட்டாயக் கல்வி பெறுவதை கல்வி பெறும் உரிமைச் சட்டம் உறுதிப்படுத்தியது.

இந்த சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்க வேண்டும். இது சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும்.

தமிழகத்தில் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 25 சதவீதி இடஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதில்லை. காரணம் கேட்டபோது, அந்த இடங்களுக்கான கட்டணத்தை அரசு தரப்பு முறையாக வழங்குவதில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த அறிவுறுத்தல்களும் இல்லை என, முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகத்தில் அனைத்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர், மெட்ரிக். பள்ளிகளின் இயக்குநர், தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here