தமிழகத்தில் மே 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

0
369

தமிழகத்தில் இன்றுமுதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மே 9) ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 12 முதல் 14-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், 10, 11 தேதிகளில் ஒருசில இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் சந்தியூரில் 11 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தலா 8 செ.மீ., சேலம் மாவட்டம் ஓமலூரில் 7 செ.மீ., அரியலூர் மாவட்டம் திருமானூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், தேனி மாவட்டம் பெரியகுளம், நீலகிரி மாவட்டம் கின்னக்கோரை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here