ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 11-ம் தேதி டெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது இந்திய விமானப் படைக்கு ரஷ்யாவின் எஸ்யு 57 போர் விமானங்களை வாங்குவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர் என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு வரும் 12, 13-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் 11-ம் தேதியே டெல்லி வருகிறார். அன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் தனியாக சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், அணு சக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் காணொலி வாயிலாக இந்திய நிருபர்களிடம் கூறியதாவது: அதிபர் புதினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. செப்டம்பர் 11-ம் தேதி டெல்லியில் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துவார்கள்.
எரிசக்தி, அணு சக்தி, பாதுகாப்பு, விண்வெளி, கல்வி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரிவுபடுத்த ரஷ்யா தொடர்ந்து உதவிகளை வழங்கும். ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவில் புதிதாக ஓர் அணு மின் நிலையத்தை தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
எஸ்.யு. 57 ரக போர் விமானம்
ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணை சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது இந்திய விமானப் படைக்காக ரஷ்யாவின் எஸ்.யு.57 ரக போர் விமானங்களை வாங்குவது குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த போர் விமானத்தின் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்தியாவுக்கு வழங்க வேண்டிய ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணைகள் குறித்தும் அதிபர் புதினும் பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்துவார்கள். ரஷ்யா அளித்த வாக்குறுதியை நிச்சயமாக நிறைவேற்றும். ரஷ்யாவின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக உள்ளோம். ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை கண்டறிந்து, அவர்களை திருப்பி அனுப்புவோம்.
ரூபாய் பணப் பரிமாற்ற சிக்கல்
ரஷ்யா, இந்தியா இடையிலான ரூபாய் பணப் பரிமாற்றத்தில் சில சிக்கல்கள் உள்ளன. இவை படிப்படியாக நீக்கப்படும். ரஷ்யாவுக்கான இந்திய பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து வருகிறது. இரு நாடுகள் இடையே விமானப் போக்குவரத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான புள்ளிவிவரங்களை அளிக்க முடியாது. ஆனால் ஒவவொரு மாதமும் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் புதின் முழுமையாக எடுத்துரைப்பார். இவ்வாறு திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.















