‘வேளச்சேரி-பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்கப்படும்’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கடந்த 1985-ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, முதற்கட்டமாக 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே 9 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே ரூ.877 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 3-ம் கட்டமாக 2008-ம் ஆண்டில் ரூ.495 கோடி செலவில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. 5கி.மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
எனினும், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றம் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ரயில் பாதை, சிக்னல் கட்டமைப்பு பணிகளும் நிறைவடைந்து விட்டது. எஞ்சிய பகுதியில் தூண்கள் அமைத்து அதற்கு மேல் ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், இப்பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆதம்பாக்கம், தில்லைகங்கா நகர் இடையே தூண்கள் அமைத்து மேம்பாலம் இணைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இவ்வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.