பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெண்கலப் பதக்கம் பென்றார். பாராலிம்பிக்ஸில் அவர் வென்ற 3-வது பதக்கமாக இது அமைந்தது. 2016-ம்ஆண்டு பாராலிம்பிக்ஸில் தங்கப்பதக்கமும், 2021-ம் ஆண்டு பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கமும் மாரியப்பன் வென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய மாரியப்பனுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாரியப்பன் கூறும்போது, “தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ளது பெருமையாக உள்ளது. இந்த முறை மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று சென்றேன். ஆனால் போட்டிக்கு முன்புஏற்பட்ட, உடல் நலக் குறைவால்தங்க பதக்கம் வெல்ல முடியவில்லை. பாரிஸ் பாராலிம்பிக்ஸில் தமிழகத்தில் இருந்து சென்ற நான்கு பேர் பதக்கங்களை வென்று உள்ளோம். அரசு துறையில் வேலை வாய்ப்பு கேட்டிருந்தேன். அதை கொடுப்பதாக நம்பிக்கை அளித்துள்ளனர்” என்றார்.