தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சார்பில், புதியகலைச்சொற்களை உருவாக்கி அவற்றை இணைய வழியில் அறிமுகப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நாமக்கல் கவிஞரின் கொள்ளுப்பேத்தியும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் துணை இயக்குநருமான இரா. மனோன்மணி பேசியதாவது: தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே மகிழ்ச்சி அடைகிறார்கள்.
எதிர்காலத்தில் தமிழ் நிலைநாட்டப்பட வேண்டுமானால் அது நம் குழந்தைகள் கைகளில்தான் இருக்கிறது. குழந்தைகளுக்குச் சிறு வயது முதற்கொண்டே, அதாவதுமழலைக் கல்வி தொடங்கும்போதே தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்து தமிழ்மொழி மீது பற்றை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் வளர்ச்சித் துறைக்கு எங்கள் துறையின் சார்பில் ஒருகோரிக்கை வைக்கிறோம். அதாவது அனைத்து அரசாணைகளும் மடல்களும் தமிழிலே வரவேண்டும். அனைத்து அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும், கடைப்பலகைகளிலும் தமிழில் மட்டுமே பெயர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, அகரமுதலி இயக்கக தொகுப்பாளர் வே. பிரபு நோக்கவுரையாற்றினார் பதிப்பாசிரியர் மா. பூங்குன்றன் திட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினார். இந்தஆலோசனை கூட்டத்தில் புலவர்வெற்றியழகன், ரா.கு.ஆல்துரை,அ.மதிவாணன், சா.ராமு, நூல் மதிப்புரையாளர் மெய்ஞானி பிரபாகர பாபு, தி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.