கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ச.உமா வரவேற்றார். விழாவுக்கு, தலைமை வகித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது நாமக்கல் மாவட்டம். கடந்த சில நாட்களாக 3 ஆண்டுகள் அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளின் நிலை குறித்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறேன். நவம்பர் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக நானே கள ஆய்வு செய்யப் போகிறேன். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 10.69 விழுக்காடாக இருக்கும் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இது அகில இந்திய வளர்ச்சி அளவைவிட விட மிக மிக அதிகம்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித்தலைவர் திமுகவுக்கு மதிப்பு சரிந்துவிட்டதாக கூறியுள்ளார். திமுகவின் மதிப்பு சரியவில்லை. உங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மதிப்பை அடைமானம் வைத்தீர்கள். உங்களுடைய பதவியைக் காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்த காரணத்தினால் உங்களுடைய மதிப்பு மட்டுமல்ல உங்கள் கட்சியின் மதிப்பும் மக்களிடம் சரிந்துவிட்டது. அதை முதலில் நீங்கள் உணருங்கள். மேற்கு மண்டலம் எங்களுடைய செல்வாக்கான பகுதி என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பீர்களே. இப்போது என்ன ஆனது. கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதையும் பொய்யாக்கிவிட்டதா இல்லையா. மக்களவைத் தேர்தலின் முடிவையொட்டி 234 சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பகுத்துப் பார்த்தால் 222 தொகுதிகளில் எங்கள் கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
எங்களைப் பொறுத்தவரை மக்களால் ஒதுக்கப்பட்ட, ஒரங்கட்டப்பட்டவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. மக்களோடு மக்களாக இருந்து, மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் தொடர்ந்து வெற்றி பெறுகிறோம். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.810.27 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நிறைவடைந்த திட்டப் பணிகளை முதல்வர் திறந்தும் வைத்தார். மேலும் 16,031 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். தொடர்ந்து, ரூ.19.50 கோடி மதிப்பிலான நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து முதல்வர் பார்வையிட்டார். முன்னதாக பரமத்திசாலையில் நிறுவப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதல்வர் திறந்தார். விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ராஜேந்திரன், மா.மதிவேந்தன், எம்.பி.க்கள் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மாதேஸ்வரன், பிரகாஷ்,தலைமைச் செயலர் நா.முருகானந்தம், எம்எல்ஏ-க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் பங்கேற்றனர்.