‘ஆபரேஷன் ஹனிமூன்’ – மேகாலயாவின் 120 போலீஸார் அடங்கிய தனிப்படைகள்

0
42

மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் ஹனிமூன்’ பற்றிய விவரம் வெளிவந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை.

கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சுற்றுலாத் துறை பாதிப்பும், ஆபரேஷனும்: தேனிலவுக்கு வந்த புதுமண தம்பதி காணாமல் போனதால் மேகாலயாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பலரும் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது. இதையடுத்தே ‘ஆபரேஷன் ஹனிமூன்’ என்ற பெயரில் மேகாலயா காவல் துறை விசாரணையை தொடங்கியது. 120 போலீஸார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 20 பேர் மூத்த அதிகாரிகள் ஆவர்.

தனிப்படைகளைச் சேர்ந்தவர்கள் மேகாலயா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தினர். சோனத்தின் செல்போன் அழைப்புகள், சமூக வலைதள பதிவுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் புலன் விசாரணை மூலம் உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here