ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை உருவாக்கும் வகையில் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.17.47 கோடி செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மூன்றடுக்கு கொண்ட இந்த அகாடமியின் தரைதளத்தில் பன்நோக்கு விளையாட்டுத் தளம், முதல் தளத்தில் டேக் வாண்டோ மற்றும் ஜூடோ விளையாட்டுத் தளம், இரண்டாவது தளத்தில் வாள்வீச்சு தளம் மற்றும் மூன்றாவது தளத்தில் விளையாட்டு அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயதிநி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மறுசீரமைக்கப்பட்ட, மேம்படுத்தப்பட்ட www.sdat. tn.gov.in என்ற இணையதளத்தையும், இணையதள சேவைகளான விளையாட்டரங்க பதிவு, உறுப்பினர் பதிவு, உயரிய ஊக்கத் தொகை இணையவழி விண்ணப்பம் மற்றும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பெறுதல் ஆகிய சேவைகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில் முதன்முறையாக தமிழகம் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்த போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் விரைவில் கவுரவிக்கப்படுவார்கள். தமிழக பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதாவிட்டால் முதல்வரிடம் கூடுதலாக கேட்டுப் பெறுவோம். பார்முலா கார் பந்தயம் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த போட்டியை நடத்துவதற்கு கூடுதல் ஸ்பான்சர்களை தேடுவோம்” என்றார்.
பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
விளையாட்டு போட்டிகளின் தலைமையகமாக தமிழகத்தை மாற்றவும், ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கவும், சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். இறகு பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இங்கு உலகத்தரத்தில் பயிற்சி வழங்கப்படும். இவை விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாக செயல்படும். அனைத்து ஊராட்சிகளுக்கும் 33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்கான கருவிகள் அடங்கிய கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் வழங்கப்படும்.
கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்க்கவும், நீர் விளையாட்டு போட்டிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில் தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி அமைக்கப்படும். இதற்காக, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.