திருச்செந்தூர் கோயில் தரிசன கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்கள் ஜூலை 21 வரை ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனக் கட்டணம், சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவை கோயில் தக்கார் அல்லது அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்டு முடிவு செய்யப்படும்.
இந்த நடைமுறை திருச்செந்தூர் கோயில் தரிசனக் கட்டண உயர்வு தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டதில் பின்பற்றப்படவில்லை. பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க போதுமான வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது.
எனவே, திருச்செந்தூர் கோயிலில் தரிசனக் கட்டணம், பூஜை கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்யவும், அதை செயல்படுத்த இடைக்காலத் தடையும் விதிக்க வேண்டும். மேலும், கோயில் தக்கார் செயல்பாட்டுக்கு தடை விதித்து, கோயிலில் அறங்காவலர் குழு அமைத்த பின்னரே கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், கட்டண உயர்வு தொடர்பாக மனுதாரர் தனது ஆட்சேபனையை பதிவு செய்துள்ளார். அவர் ஜூன் 25-ம் தேதி அனுப்பிய ஆட்சேபனை 27-ம் தேதி கிடைத்தது. மறுநாள் வழக்கு தொடர்ந்துள்ளார் எனக் கூறப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், கோயில் தரிசன கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட வேண்டும். ஆட்சேபனைகளை தெரிவிக்க இன்று (ஜூலை 7) கடைசி நாள் என்பதை ஜூலை 21 வரை நீட்டிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.















