மேகேதாட்டுவில் படிக்கட்டு, இரும்பு கம்பிகள் நடப்பட்டு அணை கட்டுமானத்துக்காக அந்த மாநில அரசு அடையாளப்படுத்தி உள்ளதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகேதாட்டுவில், அந்த மாநில அரசு அணை கட்டுமானப் பணிக்காக மேற்கொண்டுள்ள முன்னேற்பாடுகள், இரும்புக் கம்பிகள், புதிதாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் உள்ளிட்ட பணிகளை பி.ஆர்.பாண்டியன் நேற்று பார்வையிட்டார். பின்னர் ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கனகபுரா சங்கமத்தில் அர்காவதி ஆறும், காவிரி ஆறும் சங்கமிக்கின்றன. சங்கமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் மேகேதாட்டு அமைந்துள்ளது. உயரமான இரு மலைக் குன்றுகளுக்கு இடையே குறுகிய பாதை வழியாக, காவிரி தமிழக எல்லைக்குள் நுழையும் பகுதியில் மேகேதாட்டு அணையை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
மலை அடிவாரச் சாலையில் இருந்து சுமார் 150 அடி ஆழத்தில் இருந்து ஆற்றின் மட்டத்துக்குச் செல்ல புதிதாகப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அணை கட்டுமானத்துக்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு, இரும்புக் கம்பிகள் நடப்பட்டுள்ளன. அடர்ந்த வனப்பகுதியான இங்கு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால், இதுவரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அணை கட்டுமான நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேகேதாட்டில் அணை கட்டுமானப் பணிக்காக கர்நாடக அரசு முழுமையாகத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. எனவே, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறைகள் இணைந்து மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை வளத்தைப் பாதுகாக்க, பிரதமர் தலைமையில் தொடர்புடைய மாநில முதல்வர்கள் அடங்கிய பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும். “மேகேதாட்டு அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்று சென்னையில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் கூறுவதை விட்டுவிட்டு, அணை கட்டும் இடத்தில் என்ன நடக்கிறது என்பதை அங்கு சென்று பார்வையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.















