“தவெக அரசுக்கு கவசமாகவும், கேடயமாகவும் மதிமுக இருக்கும்” – வைகோ உறுதி

0
18

தவெக அரசுக்கு கவசமாகவும், கேடயமாகவும் மதிமுக இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று (ஜூலை 5) கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு திமுக ஆதரவு அளித்து, பழனிசாமியை முதல்வராக்குவது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது உண்மை என ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார். அவ்வாறு எடுத்திருந்தால் அதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்காது.

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலைகளை தான் எடுத்துக் கொண்டு, எதுவாக இருந்தாலும் தன்னிடம் கூறலாம் என்று ஆளுநர் கூறுகிறார். அதற்கு ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் தான் இதனை செய்ய முடியுமே தவிர, ஆளுநரே இதனை செய்வேன் என்றால், இது என்ன ஆளுநர் ஆட்சியா?.

ஆளுநரிடம் திமுக சார்பில் கொடுக்கப்பட்ட ஒரு புகாரில் மாநில ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதற்கான பிரிவு 356-வது பிரிவை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஏன் அதனை பயன்படுத்த வேண்டும் என்று திமுக நினைக்கிறது?. அப்படி என்றால் ஆளுநர் ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று திமுக நினைக்கிறதா?.

குதிரை பேரம் நடக்கிறது என்று திமுகவினர் கூறுகின்றனர். ஒருமுறை கம்பம் தொ்குதியில் வென்ற மதிமுக எம்.எல்.ஏ.வை ராஜினாமா செய்ய வைத்து மீண்டும் அவரை திமுக சார்பில் போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்தது பெருச்சாளி பேரமா?. இதுபோன்ற குதிரை பேரத்தை தொடங்கி வைத்ததே திமுக தான்.

இதுபோன்றுதான் அனிதா ராதாகிருஷ்ணனையும் அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து, பின்னர் திமுகவில் இணைத்து ஜெயிக்க வைத்தனர்.

தவெக ஆட்சி என்ன செய்து விட்டது என்று திமுகவினர் கேட்கிறார்கள். ஜனநாயகத்தை நாசப்படுத்துகின்ற ஊழல், கமிஷன் கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கபட்டதாக கட்சிக்கு அப்பாற்பட்ட நிறுவனதாரர்கள், தொழில் செய்பவர்களே கூறினார்கள். ஆனால், தற்போது இந்த ஆட்சியில் கமிஷன் கேட்கப்படுவது இல்லை. கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள். கமிஷன், கட்டிங், கரப்ஷன் மீட்கப்பட்டுள்ளது. இதுதான் இந்த அரசின் இமாலய சாதனை.

கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு திமுகவை ஆதரித்து நான் பிரச்சாரம் மேற்கொண்டேன். திமுகவுடன் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று அறிவித்தவுடன் எங்களது தொண்டர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். அதிமுகவிற்கு திமுக ஆதரவு கொடுக்கிறது என்றால் ஏதோ ஒன்று இருக்கிறது.

மேகேதாட்டு அணை குறித்து தூண்டி விடுவதே மத்திய மோடி அரசு தான். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் கொந்தளித்ததை போல், மத்திய அரசுக்கு ஒரு பயம் வர வேண்டும் என்றால் மொத்த தமிழகமும் கொந்தளித்து எழ வேண்டும். அதற்காக தற்போது அன்புமணி ராமதாஸ் முன்னெடுத்துள்ள முன்னெடுப்பை வரவேற்கிறேன்.

மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்கின்றனர். மதிமுகவின் 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாயமாகிவிட்டனர். முதல்வர் விஜய் நடத்துகின்ற இந்த அரசுக்கு எதிர் தரப்பில் இருந்து வரக்கூடிய கணைகளை தடுக்கின்ற கவசமாகவும், கேடயமாகவும் மதிமுக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here