NZ vs AUS டி20 தொடர் | 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா

0
258

நியூஸிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற இரு சர்வதேச டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையின் காரணமாக ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 10.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 33 ரன்களும், மேத்யூ ஷார்ட் 11 பந்துகளில் 27 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 9 பந்துகளில் 20 ரன்களும் குவித்தனர். ஜோஷ் இங்லிஸ் 14 ரன்களும், டிம் டேவிட் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மழையின் காரணமாக ஆட்டம் 10 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அதன்படி நியூஸிலாந்து அணி 10 ஓவர்கலில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று டிஎல்எஸ் விதிப்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி விளையாடிய நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து டிஎல்எஸ் விதிப்படி, ஆஸ்திரேலிய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நியூஸிலாந்து தரப்பில் பின் ஆலன் 13, வில் யங் 14, டிம் செய்பர்ட் 2, கிளென் பிலிப்ஸ் 40, மார்க் சாப்மேன் 17 ரன்கள் சேர்த்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட்டும், தொடர் நாயகனாக மிட்செல் மார்ஷும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து டெஸ்ட்போட்டி தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வரும் 29-ம் தேதி முதல்மார்ச் 4-ம் தேதி வரை நடைபெறும். 2-வது டெஸ்ட் போட்டி மார்ச் 8-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here