பள்ளி, கல்லூரியில் நுழைவு தேர்வு நடத்த கூடாது: முதல்வரிடம் நீதிபதி முருகேசன் குழு அளித்த அறிக்கையில் பரிந்துரை

0
57

மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்களையும் கணக்கில் கொள்வது, ஆசிரியர் நியமன விதிகளை கடுமையாக்குவது உள்ளிட்ட பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்ய, டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு கடந்த 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை நேற்று சமர்ப்பித்தது. தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன், இயக்குநர் ச.கண்ணப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சுமார் 600 பக்க அளவிலான அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக முதன்மைப்படுத்த வேண்டும். தொடக்க நிலை வகுப்பு முதல், பல்கலைக்கழக நிலை வரை தமிழ்வழி கல்வியை வழங்க வேண்டும். தமிழ் கற்பித்தல் தொடர்பான ஆராய்ச்சி பிரிவை கொண்டுவர வேண்டும்.

பள்ளிக்கல்வியில் தற்போதைய 5 3 2 2 என்ற படி நிலையே பின்பற்றப்படவேண்டும். 5 வயதை நிறைவு செய்யும் குழந்தைகள் 1-ம் வகுப்பில் சேரலாம். உயர்கல்வியில் புத்தகங்கள் உதவியுடன் தேர்வு எழுதும் நடைமுறையை அனுமதிக்கலாம். வாரத்துக்கு 4 பாடவேளையாக உடற்கல்வி வகுப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களை பல்வேறு மதிப்பீட்டு முறைகளை கொண்டு கடுமையான செயல்முறை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.

தமிழ், கணிதம், அறிவியலுடன் சமூகநீதி கருத்தை கொண்ட பொருளாதார, கலாச்சார, சுற்றுச்சூழல், தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்தும் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

பள்ளி வாரியத் தேர்வுகளில் சீர்திருத்தம் தேவை. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பது தேர்வுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகள்போல, தனியார் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கலாம். ஆனால், நிர்வாகத்தில் அவை தலையிடக் கூடாது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த கூடாது. தனியார் கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான கட்டணக் குழுவின் அதிகாரத்தை சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வாரியங்களின் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தை 9-ம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும். 10-ம் வகுப்பு வரை வழங்கப்படும் அரசின் அனைத்து உதவிகளையும் 12-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தலாம்.

11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண்களை கொண்டே உயர்கல்வியில் அனைத்து படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். எந்த ஒரு உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது.

கல்வி வளாகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க மாவட்டம்தோறும் ஆட்சியர் தலைமையில், மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, காவல் அதிகாரி, தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் என 5 பேர் கொண்ட குழு அமைக்கலாம்.

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, மைதானங்கள் வழங்கப்பட வேண்டும். திறமையான மாணவர்களுக்கு நிதியுதவியை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கை மீது கருத்துகள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும்: பள்ளி, கல்லூரிகளுக்கு இணையாக தனிநபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி மையங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வரவில்லை. எனவே, உரிய அதிகாரம் கொண்ட ஒழுங்குமுறை குழுவை உருவாக்க வேண்டும். இவ்வாறு நடத்தப்படும் அனைத்து பயிற்சி மையங்களையும் தடை செய்ய வேண்டும். உயர்கல்வியில் அரசின் பங்களிப்பு குறைவாக உள்ளது. பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் தனியார் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, உயர்கல்வியில் அரசு அதிக முதலீடு செய்து, கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும் என்றும் நீதிபதி முருகேசன் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.