தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 99 சதவீத காவல் நிலையங்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்தில் உள்ளன என்றும், அவற்றின் பதிவுகள் பத்திரப்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடைபெறும் அத்துமீறல்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி பதிவுகளை பத்திரப்படுத்த தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும். இது தொடர்பான விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் நிஜாமுதீன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் திருடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 500-க்கும்மேற்பட்ட காவல் நிலையங்களில் 99 சதவீத காவல் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பதிவுகள் முறையாக பத்திரப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளனர்.