தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி தவிர மற்ற பகுதிகளில் நிலங்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக்கட்டணத்தை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்ற தமிழக அரசு, வழிகாட்டி மதிப்பில் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்தது. இக்குழு நிலஅளவை எண் வாரியாக திருத்தம் செய்ய கால அவகாசம் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி வரை இருந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்த அரசு முடிவெடுத்தது.
அத்துடன், பதிவுக்கட்டணத்திலும் மாற்றம் செய்ய முடிவெடுத்தது. இதுதொடர்பாக கடந்த 2023-24-ம்ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வும், பதிவுக்கட்டணம் குறைப்பும் கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதை எதிர்த்து, கட்டுமான சங்கங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மக்கள் கருத்துகளை கேட்டு அதற்கேற்ப, வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசு வழிகாட்டி மதிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்கள், மக்கள்கருத்துகளை கேட்டு அதன் பேரில்வழிகாட்டி மதிப்பை திருத்தி அமைத்துள்ளது. இந்நிலையில், புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று காலை முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு முத்திரை விதிகள்படி, ஆண்டுதோறும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பு சீரமைப்புக்காகவும், வழிகாட்டியில் உள்ளமுரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக்குழு கடந்த ஏப். 26-ம் தேதி கூடி வகுத்துஅளித்தது. இதனை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக் குழுக்களால் மதிப்பு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான துணை குழுக்கள் மே மாதம் முதல் வாரம் கூடி மைய மதிப்பீட்டுக் குழுவின் அறிவுறுத்தல்கள்படி, வரைவு சந்தை வழிகாட்டி தயாரிக்க அந்தந்த மாவட்டத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், பொதுமக்கள் கருத்து கேட்பதற்கான நடைமுறைகளை வகுத்தளித்தது. பொதுமக்களிடம் இருந்து அறியப்பட்ட சொத்துகளுக்கான சந்தை மதிப்பு மற்றும் விற்பனை புள்ளி விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு, துணை குழுக்களால் அதற்கு ஒப்புதல் பெறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரைவு வழிகாட்டி மதிப்பைபொதுமக்கள் பார்வையிட வழிகாட்டி பதிவேடுகள், பதிவுத்துறை இணையதளம், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டன. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 15 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட துணைக்குழு 3-வது முறையாக கூடி வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபணை, கருத்துகளை பரிசீலித்து, முரண்பாடுகளை களைந்து, புதிய சந்தை வழிகாட்டி மதிப்பை அங்கீகரித்தது. இது மைய மதிப்பீட்டுக்கு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மைய மதிப்பீட்டுக்குழு, கடந்த ஜூன் 29-ம் தேதி கூடி, இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஜூலை 1 முதல் புதிய வழிகாட்டி மதிப்பு, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி நீங்கலாக தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
10 சதவீதம் வரை அதிகரிப்பு: வழிகாட்டி மதிப்பு பொறுத்தவரை, பெரும்பாலான முக்கிய பகுதிகளில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பில் இருந்து 10 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை அடையாறு சார்பதிவக எல்லைக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் ஒரு சதுரடிக்கு ரூ.14 ஆயிரம் என்றிருந்த மதிப்பு தற்போது ரூ.15,400 ஆகவும், அண்ணாசாலை தெருவில் ரூ.9500 என்றிருந்த மதிப்பு தற்போது ரூ.10,500 ஆகவும், காந்தி மண்டபம்சாலையில் ரூ.10 ஆயிரம் என்றிருந்தது தற்போது ரூ.11 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், தேனாம்பேட்டை மண்டலத்தில் அண்ணாசாலையில் நந்தனம் முதல் ஜெமினி மேம்பாலம் வரையிலான பகுதிக்கு ரூ.19 ஆயிரம் என்பதும், அடையாறு கிளப் சாலையில் ரூ.23 ஆயிரம் என்பதும், அம்புஜம் தெருவில் ரூ.13ஆயிரம் என்பதும், அவ்வை சண்முகம் சாலையில் ரூ.12 ஆயிரம்என்ற மதிப்பிலும் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.