பாட்னா தீ விபத்தில் தாய் இறந்ததாக கூறி ரூ.83 லட்சம் காப்பீடு பெற முயன்றவர் சிக்கினார்

0
153

பிஹார் மாநிலம் பாட்னா தீ விபத்தில் தனது தாய் இறந்ததாக கூறி அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் ரூ.83 லட்சம் காப்பீட்டு தொகை பெற முயன்றது அம்பல மாகியுள்ளது.

பிஹார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஏப்ரல் 25-ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு களும் முடிந்தன.

இந்நிலையில் இந்த ஓட்டல் தீ விபத்தில் இறந்தவர்களில் தனது தாய் சுமன் லாலும் ஒருவர் என அமெரிக்காவில் பணியாற்றும் அங்கித் லால் எனும் இந்தியர் காப்பீட்டுக்கு விண்ணப்பித்தார். இதற்கு அவர் தன் தாயின் பெயரில் இறப்புச் சான்றிதழும் சமர்ப்பித்தார். இது பாட்னா மாநகராட்சி பெயரில் இருந்துள்ளது.

இந்நிலையில், சுமன் லால் இறந்ததை விசாரிக்க அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் தனது அதிகாரியை பாட்னாவுக்கு அனுப்பியது. இவர், பாட்னா காவல்நிலையம் சென்று விசாரித்ததில் சுமன் லால் பெயரில் எவரும் இறக்கவில்லை எனத் தெரியவந்தது. ஓட்டல் உரிமையாளரும் இதனை உறுதி செய்தார்.இதனால் அங்கித் லால் முறை கேடாக காப்பீட்டுத் தொகைபெறமுயன்றது வெட்ட வெளிச்சமானது. இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க காப்பீட்டு நிறுவனம் புகார் அளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த அங்கித் லாலுக்கு மோசடி புகாரின் கீழ்கடுமையான தண்டனை கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. இதற்கு முன்பும் சிலர் இதுபோல், காப்பீட்டு நிறுவனங்களிடம் பொய்கூறி காப்பீட்டு தொகை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

அங்கித் மோசடியால், இந்தியாவில் இறந்ததாக கூறி காப்பீட்டு தொகை பெற்றவர்கள் குறித்து விசாரிக்க காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.