அவதூறு வழக்கில் சமூக சேவகர் மேதா பட்கருக்கு 5 மாதம் சிறை: டெல்லி ஆளுநருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

0
150

மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நர்மதா பள்ளத்தாக்கு மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்க மக்களை தவறாக வழிநடத்தியதாக சமூக சேவகர் மேதா பட்கர் மீது புகார் எழுந்தது.

மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மேதா பட்கர், வி.கே.சக்சேனாவுக்கு எதிராக பேசினார். இதையடுத்து, மேதா பட்கருக்கு எதிராக வி.கே. சக்சேனா அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

2001-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அப்போது காதி மற்றும்கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவராக வி.கே. சக்சேனா இருந்தார்.இவர் தற்போது டெல்லி துணைநிலை ஆளுநராக உள்ளார். இந்தவழக்கின் மீது டெல்லி சாகேத்நீதிமன்ற வளாகத்தில் உள்ளபெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. விசாரணை முடிவடைந்தநிலையில் மேதா பட்கர் குற்றவாளி என கடந்த மே 24-ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று தண்டனைவிவரத்தை டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ராகவ் ஷர்ம் அறிவித்தார். அவதூறு வழக்கில் மேதாபட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்ததுடன், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் மேதா பட்கருக்கு மாஜிஸ்திரேட் ராகவ் ஷர்ம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில், மேதா பட்கருக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அவரின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அதிக தண்டனை விதிக்கவில்லை என மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேதா பட்கர் கூறியதாவது: உண்மையை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. நாங்கள் யாரையும் இழிவுபடுத்த முயற்சிக்கவில்லை. எங்கள் பணியை மட்டுமே செய்து வருகிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நாங்கள் மேல்முறையீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

கடந்த 2000-ம் ஆண்டு முதலே மேதா பட்கருக்கும், வி.கே. சக்சேனாவுக்கும் இடையே சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேதா பட்கர் நடத்தி வரும் `நர்மதா பச்சாவ் அந்தோலன்’ அறக்கட்டளைக்கு எதிராக சில விளம்பரங்களை கொடுத்ததாக சக்சேனா மீது மேதா பட்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.