நித்திரவிளையருகே பாலாமடம் பகுதியில் தூத்தூர் எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. மீனவ கிராமங்களின் மையப்பகுதியில் இந்த வங்கி இருப்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மதியம் வங்கி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தபோது மேலாளர் அறையின் மேல்பகுதியில் இருந்து திடீரென புகையுடன் பற்றி எரிந்தது. இதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து வங்கியில் இருந்து வெளியே ஓடினார்கள். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு வங்கியில் இருந்த தீயணைப்பு சிலிண்டர் மூலம் தீயை அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் பரிசோதித்தபோது, மேலாளர் அறையில் உள்ள ஏசிக்கு வருகின்ற மின்சாதனத்தில் இருந்து வெளியான தீப்பொறி தான் புகை வருவதற்கு காரணம் என்றும், பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தனர். வங்கியில் தீப்பிடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.