டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை முன் தீவிர வாதிகளின் கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் 10 பேர் கைதாகினர். காரை ஓட்டிவந்து வெடிக்கச் செய்த முக்கிய குற்றவாளி புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி என தெரியவந்தது.
டெல்லி பாட்டியாலா ஹவுஸில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடர்ந்தது. இதில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 7,500 பக்க குற்றப்பத்திரிகையில் பல முக்கிய சதிகளை என்ஐஏ அம்பலப்படுத்தி உள்ளது.
வெடிபொருட்கள், ட்ரோன்-ராக்கெட் தாக்குதலுக்கான தயாரிப்புகள், ஆயுதங்கள் உள்ளிட்ட மீட்கப்பட்ட பொருட்களுடன் 588 சாட்சிகளின் டிஜிட்டல் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. என்ஐஏ குற்றப் பத்திரிகையில் இதுவரை வெளிவராத புதிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இதன்படி, டெல்லி கார் குண்டுவெடிப்பு ‘ஆபரேஷன் ஹெவன்லி ஹிந்த்’ எனும் பெயரில் நடத்தப்பட்டுள்ளது.
அல்-காய்தாவுடன் தொடர்புடைய ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ என்ற தீவிரவாத அமைப்பின் ஒரு பிரிவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக என்ஐஏ கூறுகிறது. இவர்களின் நோக்கம் டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்த்துவது மட்டுமல்ல, இந்தியாவில் பெரிய அளவிலான ஒரு ஜிஹாதி வலையமைப்பை நிறுவி, நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைப்பது எனக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறை உதவிப் பேராசிரியரான டாக்டர் உமர் இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்தி உள்ளார்.
குற்றவாளிகள் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் தொழிலையும் தொழில்நுட்ப அறிவையும் பயன்படுத்தி உள்ளனர். சிலர் ரசாயனப் பொருட்களைப் பெறுவதிலும், மற்றவர்கள் டிஜிட்டல் தகவல் தொடர்புகளிலும், இன்னும் சிலர் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். 2022-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒரு ரகசியக் கூட்டத்தில் இந்த சதித்திட்டத்துக்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளில் சிலர் துருக்கி வழியாக ஆப்கானிஸ்தான் சென்று அங்கு தீவிரவாதப் பயிற்சி பெற முயன்றுள்ளனர். இந்த முயற்சி தோல்வியடைந்தபோது, அவர்கள் இந்தியாவுக்குள் ஒரு புதிய பிரிவை உருவாக்கி உள்ளனர். சில சந்தேக நபர்கள் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களை பிடிக்க சோதனைகள் தொடர்வதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.















