அமைதி முயற்சியை சீர்குலைக்கும் வகையில் லெபனான் மீது தாக்குதல் நடத்திய நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தின. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போராக வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அறிவித்த அமெரிக்கா, ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
இதன் எதிரொலியாக, சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் கடும் வாக்குவாதமாக மாறியதாக அமெரிக்க ஊடகமான ‘ஆக்ஸியோஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
நீ பைத்தியக்காரன்
தொலைபேசி உரையாடலின்போது நெதன்யாகுவை மிகக் காரசாரமான வார்த்தைகளால் திட்டிய ட்ரம்ப், அவர் நன்றி கெட்டவர் என்றும் சாடினார். நெதன்யாகுவின் ஊழல் வழக்கைக் குறிப்பிட்டு, ‘‘நான் மட்டும் இல்லையென்றால் நீ இப்போது சிறையில் இருந்திருப்பாய். நான்தான் உன்னைக் காப்பாற்றுகிறேன்.
ஆனால், உன்னுடைய இந்த நடவடிக்கையால் இப்போது உலக நாடுகள் அனைத்தும் உன்னையும், இஸ்ரேலையும் வெறுக்கின்றன. நீ ஒரு பைத்தியக்காரன்’’ என்று ட்ரம்ப் ஆவேசமாகப் பேசினார். இந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, லெபனான் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த வேண்டாம் என்ற தனது கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.















