நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கடத்தல் என்பது நாகை மாவட்டத்துக்குப் புதிதல்ல. இங்கிருந்து இலங்கைக்குப் போதைப் பொருட்களும், அங்கிருந்து தமிழகத்துக்குத் தங்கமும் கடத்தப்படுவது நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை பகுதிகளிலிருந்து அதிவேகப் படகில் சென்றால் சுமார் ஒரு மணி நேரத்தில் இலங்கை கரையை அடைந்துவிட முடியும். இதன் காரணமாக, நாகை- இலங்கை இடையே தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றைக் கடத்தும் சம்பவங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடத்தலின் சொர்க்க பூமி!
1978 முதல் 1991 வரை நாகை கடலோரப் பகுதிகள் கடத்தல்காரர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தன. அதன்பிறகு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கோடியக்கரையைச் சேர்ந்த சண்முகம் சிபிஐ விசாரணையில் சிக்கியது, அந்தக் காலகட்டத்தில் வேதாரண்யம் பகுதியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 36 பேர் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடத்தல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.
இருப்பினும் 2011 முதல் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின. அந்த ஆண்டு நவம்பரில், கோடியக்கரை வனப்பகுதியிலிருந்து சென்னைக்குக் கடத்திச் செல்லப்பட்ட 15.6 கிலோ தங்கக் கட்டிகளை நாகை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கோடியக்கரையைச் சேர்ந்த சண்முகத்தின் மகன் ஆனந்தன், ஓட்டுநர் வேதையன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, 2013-ல் இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 7.70 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே காலகட்டத்தில், இலங்கை தலைமன்னார் பகுதியில் ஒரு படகிலிருந்து 24.2 கிலோ தங்கக் கட்டிகளை அந்நாட்டுக் கடற்படையினர் கைப்பற்றினர். அந்த ஆண்டில் மட்டும் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு 100 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தி வரப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு தங்கக் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தொடரும் தங்கக் கடத்தல்
இந்த ஆண்டு ஜனவரியில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட இருந்த 11.300 கிலோ தங்கக் கட்டிகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்தனர். இவற்றின் இந்திய மதிப்பு ரூ.7.45 கோடி எனக் கூறப்பட்டது. ஜனவரி மாத இறுதியில், விழுந்தமாவடியில் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6 கிலோ கடத்தல் தங்கமும், அதைத்தொடர்ந்து நாகூரில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட 14.82 கிலோ கடத்தல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, கடந்த மே மாதம் காங்கேசன் துறையிலிருந்து நாகைக்கு வரவிருந்த கப்பலில் பயணம் செய்ய இருந்த சிலரிடம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகத் தங்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 26 பேரின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
தங்கக் கடத்தல் ஒருபுறம் இருக்க, தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தாணிக்கோட்டகம் அருகே 2 கார்களில் கொண்டு செல்லப்பட்ட 120 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதே வாரத்தில், இலங்கைக்குக் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 500 கிலோ கஞ்சாவும் சிக்கியது. மேலும் நாலுவேதபதி கடற்கரையில் 364 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
கண்காணிப்பு வசதிகள் போதுமா?
கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதிகளில் இந்தியக் கடற்படை முகாம்களும், நாகை, வேதாரண்யத்தில் கடலோரக் காவல் படை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. நாகையில் மத்திய சுங்கத் துறை அலுவலகமும் இயங்கி வருகிறது.
இருப்பினும், நாகை மாவட்டத்தின் நீண்ட கடற்கரையையும், கடல் வழியாக நடைபெறும் சட்டவிரோதச் செயல்பாடுகளையும் முழுமையாகக் கண்காணிப்பதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை எனக் கூறப்படுகிறது.
நீண்ட கடற்கரைப் பகுதி, அதிவேகப் படகுகளின் பயன்பாடு ஆகியவையும் கண்காணிப்புப் பணிகளுக்குச் சவாலாக உள்ளன. இதனால், கடல் வழியாக நடைபெறும் கடத்தலைத் தடுப்பதில் சவால்கள் நீடிக்கின்றன. எனவே, நாகை கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதுடன், நவீன கண்காணிப்புக் கருவிகள், கூடுதல் ரோந்துப் படகுகள், போதிய மனிதவளம் ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.














