ஒலி இரைச்சலை தடுக்​கும் வகையில் போக்கு​வரத்து போலீஸாருக்கு நவீன ‘இயர்​பட்ஸ்’ கருவி

0
27

போக்குவரத்து போலீஸாருக்கு ஒலி இரைச்சலை தடுக்கும் நவீன ‘இயர்பட்ஸ்’ கருவி அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் பயணிக்கின்றன. அந்த வாகனங்களில் இருந்து வரும் சத்தம் 90 முதல் 150 டெசிபல் இருப்பதாக தெரியவருகிறது. இத்தகைய அதிக ஒலி இரைச்சல் அளவுகளை போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீஸார் தினமும் கேட்பதால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல், மிகுந்த மன அழுத்தத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீஸார் அதிகப்படியான ஒலி இரைச்சலை தவிர்க்க, காதில் பொருத்திக்கொளும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன ‘இயர்பட்ஸ்’ கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவி, சோதனை அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் 20 போலீஸாருக்கு நேற்று வழங்கப்பட்டது. இதை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பி.சுதாகர் வழங்கினார்.

போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்ட இந்த ‘இயர்பட்ஸ்’, இரைச்சல் அளவை 25 சதவீதம் வரை குறைக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, உரையாடல் தெளிவாக கேட்பதற்காக, தேவையற்ற சத்தத்தை குறைக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இதை காதில் பொருத்திக் கொண்டு போக்குவரத்து போலீஸார் பணியில் ஈடுபடும்போது, எவ்வித ஒலி இரைச்சல் இடையூறின்றி தங்களது பணிகளில் கவனம் செலுத்த முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் நாட்களில் அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் இந்த ‘இயர்பட்ஸ்’ கருவி வழங்க சென்னை போக்குவரத்து காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிகழ்ச்சியின் போது, இணை ஆணையர் (வடக்கு) மகேஷ் குமார், துணை ஆணையர் (போக்குவரத்து) வி.பாஸ்கரன், உதவி ஆணையர் கே.பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here