மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் குழுவின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மொத்தம் 10 முதல் 13 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதன்பிறகு, நாளை (ஜூன் 17) விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் நடைபெறுகிறது. இவற்றில் மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் பெரும்பாலான இடங்களில் உயர்மட்டப்பாதை பணிகள் நடைபெறுகின்றன.
குறிப்பாக, சென்னை வர்த்தக மையம் முதல் போரூர் வரை உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதைபோல, இந்த உயர்மட்டப்பாதையின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், போரூர் – நந்தம்பாக்கம் வரை இணைப்பு பாலம் அமைக்கும் பணிகளும் சேர்ந்து நடைபெற்று வருகின்றன.
40 அடி நீள கர்டர்: இதற்காக, இரண்டு தூண்கள் இடையே கர்டர் எனப்படும் “ராட்சத கான்கிரீட் பாலங்கள்” அமைக்கப்படுகின்றன. இப்பணிகளை எல் அண்டு டி நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 12-ம் தேதி இரவு, 40 அடி நீளமுள்ள, கர்டர் திடீரென சரிந்துவிழுந்தது. இதில், ரமேஷ் (40) என்பவர் சிக்கி உயிரிந்தார். இந்த விபத்து தொடர்பாக நந்தம்போக்கம் போலீஸார் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் என இருதரப்பிலும் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
நடவடிக்கை எடுக்கப்படும்: இதுகுறித்து, எல் அண்ட் டி நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மீது அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்தல் என பி.என்.எஸ் 105 பிரிவின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர, மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவும் விசாரித்து வருகிறது.
இதில் ஒப்பந்த பணிகள் மேற்கொண்டு வந்த எல் அண்ட் டி நிறுவன பொறுப்பாளர், பகுதிப் பொறுப்பாளர், இளநிலைப் பொறியாளர் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், தற்போது வரை 7 பேரிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. இணைப்பு பாலத்துக்காக கர்டர் அமைத்தது, அதற்காக பயன்படுத்தி கட்டுமானப் பொருட்கள், உலோகம், தூண்களின் நிலை உட்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது வரை 7 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். இந்த விசாரணை கர்டர் தொடர்பாக மட்டுமே இருக்கிறது. மொத்தம் 10 முதல் 13 பேரிடம் விசாரணை நடத்த உள்ளோம். செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணை அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநரிடம் சமர்ப்பிப்போம். இதன்பிறகு, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.