முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் தேவன்சேரி – வயலங்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் துண்டு விளை என்ற பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலை சீரமைக்க தமிழக அரசு ரூபாய் 4 லட்சம் நிதி ஒதுக்கி பணி செய்து முடிக்கப்பட்டது.
ஆனால் வேலை துவங்கும் முன்பு ஊராட்சி நிர்வாகத்திடம் சாலையில் தண்ணீர் தேங்காமல் மேடான பகுதியை சமன் செய்த பின் சிமெண்ட் தரை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதை கண்டு கொள்ளாமல் பணி முடிக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக பொய்து வரும் மழையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை கண்டித்தும் சாலையை மீண்டும் சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காட்டுக்கடை சந்திப்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. வட்டார குழு உறுப்பினர் வின்சென்ட் தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா பாய் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.