குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி: மம்தா, அகிலேஷ், உத்தவ், தேஜஸ்விக்கு ராகுல் காந்தி அழைப்பு

0
18

டெல்லியில் இன்று குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்த இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராகுல் காந்தி.

எஸ்ஐஆர் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்ப்பு வலுக்கிறது. தலைநகர் டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி தனது அரசியல் அழுத்தத்தை அதிகரித்துள்ளது. நேற்று ராஜ்காட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் 3-ம் நாளாகத் தொடர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரையும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாக அழைத்துச் செல்லக் காங்கிரஸ் திட்டமிடுகிறது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவையும் இன்று சந்திக்கத் தயாராகி வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “குடியரசுத் தலைவரை சந்திப்பில் பங்கேற்கும் தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கடந்த அக்டோபர் 2-ஆம் தேதியே குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கடிதம் அனுப்பி விட்டோம்.

பிறகு, கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தலைவர்களின் பெயர்களுடன் மீண்டும் கோரிக்கை விடுத்து, அக்டோபர் 7, 8 அல்லது 9-ஆம் தேதிகளில் நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அலுவலகம் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. எனினும், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் மற்றும் உத்தவ் தாக்கரேவை ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

குடியரசு தலைவரை சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால், இன்று வெள்ளிக்கிழமையில் குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் அவர்களது எம்பிக்களுடன் கட்சியினரும் திரளாகச் செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், இன்றையப் பேரணியில் கலந்துகொள்ள டெல்லிக்கு கிளம்பி வருமாறு ராகுல் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார். இதை மம்தா உடனடியாக ஏற்றிருப்பதாகத் தெரிகிறது.

இதை கொல்கத்தாவிருந்து புறப்படுவதற்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனர் மம்தா பானர்ஜி மறைமுகமாக உறுதிப்படுத்தினார். துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நடைபெறும் நேரமாக இருந்தபோதிலும் அவர் டெல்லி செல்கிறார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here