‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா ராகுல் காந்தி? – இண்டியா கூட்டணி சலசலப்பும் பின்னணியும்

0
18

மத்தியில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, பல முக்கிய உள்முரண்களைச் சந்தித்து வருகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அப்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செய்த ‘திடீர் தர்ணா’ ஒட்டுமொத்த ஊடக வெளிச்சத்தையும் அவர்கள் பக்கம் திருப்பிக் கொண்டது.

கூட்டணிக் கட்சிகளின் தியாகத்தைப் புறக்கணித்துவிட்டு, ‘ராகுல் ஷோ’ நடத்த நினைக்கும் காங்கிரஸின் சுயநல உத்தி, கூட்டணியின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி இண்டியா கூட்டணியின் முதுகெலும்பாக நின்றவர் அகிலேஷ் யாதவ். ஆனால், டெல்லி வீதிகளில் போராட்டம் வெடிக்கும்போது, மாநிலத் தலைவர்கள் களத்தில் நின்று குரல் கொடுத்தாலும், காங்கிரஸ் தலைமை அவர்களை வெறும் கூட்டணித் தொண்டர்களாக மட்டுமே பார்க்கிறது.

டெல்லியில் மற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, கூட்டணிக் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் ராகுல் நடத்திய தனியாவர்த்தனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ராகுல் காந்தியை தேசியத் தலைவராக்கும் மேடையாக மட்டுமே கூட்டணி பயன்படுத்தப்படுகிறதோ?” என்ற சந்தேகம் கூட்டணிக் கட்சிகளுக்கு எழுந்துள்ளது. காங்கிரஸின் இந்த ‘பெரிய அண்ணன்’ மனப்பான்மை கூட்டணிக்குத் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

தேசிய அளவில் நரேந்திர மோடிக்கு மாற்றாக தன்னை மட்டுமே நிறுத்துவதில் ராகுல் காந்தி காட்டும் வேகம், கூட்டணியில் உள்ள பிற மாநிலத் தலைவர்களின் பிம்பத்தைச் சுருக்கி விடுவதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியா?

டெல்லியில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட சம்பவங்கள், கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக இண்டியா கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திடீர் முடிவுகள்: டெல்லி போராட்டத்தின்போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் தலைவர்கள் அகிலேஷ் யாதவ் உட்பட காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர். ஆனால், ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கடைசி நேரத்தில் திட்டமிட்ட போராட்ட உத்தியை மாற்றி, அகில இந்திய வானொலி பவன் வளாகத்துக்குள் நுழைந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டமாக இருந்த நிகழ்வு, கணநேரத்தில் ‘ராகுல் – பிரியங்காவின் தனிப்பட்ட போராட்டம் மற்றும் கைது’ என்பதாக ஊடகக் கவனத்தைப் பெற்றது.

முன்னறிவிப்பின்றி காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் எடுத்த இந்தத் தனிப்பட்ட முடிவால், மற்ற கூட்டணித் தலைவர்கள் ‘நாங்கள் வெறும் கூட்டத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறோமா?’ என்ற கேள்வியை எழுப்பியதாக கூறப்படுகிறது.

மேலும், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த அதிருப்தி காரணமாகக் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்திலும் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளிவந்தன.

முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் உருவான மனக்கசப்பைச் போக்க, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சம்பந்தப்பட்ட தலைவர்களைத் தொடர்புகொண்டு விளக்கமளிக்க வேண்டிய சூழல் உருவானது.

உத்தி சரியானதா?

தேசிய அளவில் சரிந்துகிடக்கும் தனது பிம்பத்தை மீட்டெடுக்க ராகுல் காந்தியை மையப்படுத்துவது காங்கிரஸுக்கு லாபகரமாக இருக்கலாம். ஆனால், அது கூட்டணி தர்மத்துக்கு நெருடலை உருவாக்குகிறது. ராகுல் மட்டுமே மையம் என்ற பிம்பம் உருவாக்கப்படும்போது மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜரிவால் போன்ற தலைவர்களின் பிம்பம் சுருங்குகிறது.

உத்தரப் பிரதேசத்தில் தங்களது சொந்த பலத்தில் வெற்றி பெற்ற அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள், காங்கிரஸின் ‘டெல்லி மையக் கொள்கை’க்கு கீழ் இயங்குவதை மறுபரிசீலனை செய்யக்கூடும்.

ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியின் தன்னிச்சையான செயல்கள் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும், உடனடியாக இண்டியா கூட்டணிக்குள் பிளவை உருவாக்குவது கடினம். ஏனென்றால், ‘பாஜக எதிர்ப்பு’ என்ற பொது இலக்குடன் கூட்டணிக் கட்சிகள் இருப்பதால், பாஜகவையே தங்களின் முதன்மை சித்தாந்த மற்றும் அரசியல் எதிரியாகக் கருதுகின்றன.

அதுமட்டுமல்லாமல் உத்தரப் பிரதேசம், பிஹார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் கணிப்புகள் இன்னமும் கூட்டணித் தேவையை உறுதி செய்கின்றன.

ராகுல் காந்தியின் தீவிரப் போராட்டங்கள் காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு உதவியாக இருந்தாலும், இண்டியா கூட்டணியைப் பொறுத்தவரை அது ‘ஒன் மேன் ஷோ’ ஆக மாறக் கூடாது என்பதே கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here