அருணாச்சல் எல்லையில் பதற்றத்தைத் தணிப்பது தொடர்பாக இந்திய-சீன ராணுவத் தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அருணாச்சல பிரதேசத்தை தனது நாட்டின் ஒரு பகுதி எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், இந்தியா, இதை திட்டவட்டமாக நிராகரித்து, அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்று கூறி வருகிறது.
இந்த சூழலில் அருணாச்சல பிரதேச எல்லையில் பல இடங்களில் இந்திய-சீன படைகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படை தலைமை இயக்குநர் சத்ருஜித் கபூர் கடந்த மாத இறுதியில் தெரிவித்தார்.
இது இருநாடுகளுக்கு இடையே பதற்றமான சூழலை உருவாக்கியது. இந்நிலையில், இருநாடுகளின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எல்லையில் மோதல் போக்குகளை தவிர்ப்பது, கடுமையான குளிர்கால மாதங்களுக்கு முன்னதாக பதற்றத்தைத் தணிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.














