பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படம் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘எம்புரான்’. பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2-ம் பாகமாக இப்படம் உருவாகி இருக்கிறது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மலையாளத்தில் அதிக திரையரங்குகள், முதல் நாளில் அதிக வசூல் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை இப்படம் படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், அதற்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாக ட்ரெய்லர் இப்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
3 நிமிடங்கள் நீடிக்கும் இந்த ட்ரெய்லர், அரசியல் – ஆக்ஷன் – டிராமா ஜானரில் பிரம்மாண்ட மாஸ் சினிமாவாக ‘எம்புரான்’ உருவாகி இருப்பதை உறுதி செய்கிறது. டோவினோ தாமஸ், மஞ்சு வாரியார் முதலானோர் முக்கிய கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கின்றனர். ட்ரெய்லரின் பாதியில் அரசியல் வசனங்களுடன் மோகன்லால் கதாபாத்திரத்துக்கான பில்டப் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
ஆக்ஷன் ஹீரோவுக்கான வெஸ்டர்ன் காஸ்ட்யூம் தொடங்கி மடித்துக் கட்டும் வேட்டி வரையில் வகை வகையாக ஆக்ஷனில் அதகளம் செய்கிறார் மோகன்லால். குறிப்பாக, அவர் பார்வையின் ஷார்ப் தன்மை நிச்சயம் ரசிகர்களுக்கு அழுத்தம் கூட்டும் என்பது உறுதி.
வெளிநாட்டு லோக்கேஷன்கள், கேம் ஆஃப் த்ரோன் சப்போர்ட்டிங் ஆக்டர் என வேறு வேறு தளங்களில் எதிர்பார்ப்பைக் கூட்டும் ‘எம்புரான்’ ட்ரெய்லரில் மோகன் லாலுக்கு இணையாக தனது அசால்டான பிரசன்ஸ் மூலம் கவனம் ஈர்க்கிறார் பிருத்விராஜ். ட்ரெய்லரே நீண்ட அனுபவம் தரும்போது, முழுப் படம் அயர்ச்சியை ஏற்படுத்தாமல் எங்கேஜிங்காக இருந்தால் ‘எம்புரான்’ வசூல் வேட்டை ஆடுவது நிச்சயமே.