கிள்ளியூர் அருகே மாங்கரை என்ற இடத்தை சேர்ந்தவர் சஜின் (24). இவர் கடந்த 16ஆம் தேதி வேலைக்குச் சென்ற பின்னர் மாயமானார். 17ஆம் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அவரது தந்தை தேவராஜ் அளித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆனால் அவருடைய சாவில் மர்மம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என கேட்டு அவரது உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் உடலை வாங்க மறுத்து நேற்று மாங்கரை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று ஐந்து பேரைப் போலீசார் பிடித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் போலீசார் சஜினின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சஜினின் உடலை இன்று உறவினர்கள் பெற்றுக்கொண்டு அவருடைய உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற்றது. மேலும் போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கைப்படி மேல்நிலை நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். மேலும் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஒரு நபர் திடீரென மாயமாகியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவரையும் தேடிவருகின்றனர்.