கொல்லங்கோடு அருகே பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (56). இவர் அந்தப் பகுதியில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் நெந்திரன் வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று (11-ம் தேதி) காலை செல்வன் தனது தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு நன்றாக விளைந்த இரண்டு குலைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். விவசாய நிலத்தின் அருகே உள்ள புதர் மறைவில் மாலை முதல் நள்ளிரவு வரை குடிமகன்கள் மது போதையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்களாம். குடிமகன்கள் வாழைக்குலைகளை வெட்டி எடுத்துச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.