காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் த‌மிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு

0
63

காவிரி ஒழுங்காற்று குழுவின் 97-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் நேரடியாக கலந்துகொண்டார்.

ஒழுங்காற்று குழுவின் செயலாளர் டி.டி.ஷர்மா, உறுப்பினர் கோபால் ராய், கர்நாடகா, கேரளா,புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய நிபுணர்களும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் 4 மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் பாசனப் பகுதிகளில் அமைந்துள்ள அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழைப் பொழிவின் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசின் தரப்பில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்துக்கு ஜூன் 1 முதல் 11ம் தேதிக்குள் 3.370 டிஎம்சி நீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசுஇந்த காலக்கட்டத்தில் 1.316டிஎம்சி நீரை மட்டுமே திறந்துவிட் டுள்ளது. இன்னும் 2.054 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் 14.080 டிஎம்சி நீரே இருப்பில் உள்ளது. குடிநீர் தேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தினமும் 1800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நிலுவையில் உள்ள 2.054 டிஎம்சி நீரையும், ஜூனில் தரவேண்டிய 9.19 டிஎம்சி நீரையும் சேர்த்து திறக்க கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்” என வலியுறுத்த‌ப்பட்டது.

இதற்கு கர்நாடக அரசின் தரப்பில், ‘‘காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளிலும் குறைந்த அளவிலே நீர் உள்ளது. இந்த நீரைக் கொண்டே குடிநீர் மற்றும் பாசன‌ தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்துக்கு நீரை திறந்துவிட்டால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.தற்போதைய சூழலில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தமிழக அரசின் தரப் பில், ‘‘கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் நீர் இருப்பை கணக்கிட்டு, தமிழகத்துக்கு மே மாதத்தில் வழங்க வேண்டிய நீரை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இந்திய வானிலை ஆய்வு மையம்ஜூன் முதல் வாரத்தில் கர்நாடகாவில் வழக்கத்தைவிட அதிக மழை பொழிந்துள்ளது. ஜூன் இறுதி வாரத்திலும் கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. எனவே தமிழகத்துக்கு உடனடியாக நீரை திறக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. இதனை கர்நாடக அரசு ஏற்கவில்லை.

நீண்ட விவாதத்துக்கு பின்னர் காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா பேசுகையில், ‘‘ஜூன் கடைசி வாரத்தில் அணைகளின் நீர் இருப்பு, மழைப் பொழிவின் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்கலாம். அடுத்த கூட்டம் ஜூன் 27-ம்தேதி நடைபெறும்” எனக்கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.