போர்க் கப்பல்களுக்காக 26 ரஃபேல் விமானம் வாங்க இந்தியா – பிரான்ஸ் பேச்சு

0
187

இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்துவதற்காக, 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா – பிரான்ஸ் அதிகாரிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடமிருந்து ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் மிக் 29 ரக போர் விமானங்களுக்கு மாற்றாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்த பேச்சுவார்த்தை ஜுன் 2-வது வாரத்துக்கு ஒத்திபோடப்பட்டது.

அதிகாரிகள் டெல்லி வருகை: இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த, பிரான்ஸ் அதிகாரிகள் குழுவினர் டெல்லி வந்துள்ளனர். அவர்களுடன் ராணுவ தளவாட கொள்முதல் பிரிவு இயக்குனரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் விமானத்தின் விலை உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.