தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

0
41

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நீண்டகாலமாக போராடி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றும் அறிவிப்புகள் இடம்பெறவில்லை. சரண் விடுப்பு சலுகை மட்டும் 2026-27-ம் நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் அதிருப்தி அடைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அதன்படி சென்னை எழிலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோ.சுரேஷ், கு.வெங்கடேசன், மு.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை நிறைவேற்ற வேண்டும். தற்போது வெளியிட்டுள்ள சரண் விடுப்பு குறித்த அறிவிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயலாகும். கடந்த 4 ஆண்டுகளில் முதல்வரை 7 முறை சந்தித்துள்ளோம். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

கல்வி, மருத்துவத் துறைகளில் முழுமையாக வெளி முகமை (அவுட்சோர்சிங்) முறை அமல்படுத்தப்படுகிறது. இது சமூகநீதிக்கு எதிரானது. இந்த மாத இறுதிக்குள் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில் எங்கள் உயர்மட்டக்குழு மார்ச் 30-ம் தேதி கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here