நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ‘சூப்பர் 8’ சுற்றோடு வெளியேறி உள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. இந்த தொடர் தான் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் உடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை வார்னர் பகிர்ந்துள்ளார். ‘இனி எல்லாம் உங்களுடையது சாம்பியன்’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார்.
37 வயதான வார்னர், சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009-ம் ஆண்டில் அறிமுகமாகி இருந்தார். தொடக்கத்தில் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் விளையாடினார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அதிரடி தொடக்க ஆட்டக்காரர். ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று ஃபார்மேட் கிரிக்கெட்டிலும் மொத்தமாக 18,995 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை (இரண்டு முறை 2015 மற்றும் 2023), ஐசிசி டி20 உலகக் கோப்பை (2021), ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற அணியில் அங்கம் வகித்தவர். இதில் 2021-ல் ஆஸ்திரேலிய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது அந்த தொடரின் தொடர் நாயகன் விருதை வென்றவர்.
இது தவிர டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் ஆக்டிவாக விளையாடி வருகிறார். இந்தியாவில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருபவர். அதன் காரணமாக இந்திய சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் உருவாக்கி, அதை அவர் பகிர்வது உண்டு. கடந்த 2023-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தான் அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டி. கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டி அவரது கடைசி டி20 போட்டியாக அமைந்துள்ளது.
வரும் 29-ம் தேதி பார்படாஸில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி தனது கடைசி சர்வதேச போட்டியாக இருக்க வேண்டும் என வார்னர் விரும்பி இருப்பார். இருந்தாலும் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறிய காரணத்தால் அது நடக்கவில்லை. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 178 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இயந்து அரை சதங்கள் அடங்கும்.
வார்னருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் இருப்பார் என தெரிகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அதிரடி தொடக்கம் தனது அசத்தி இருந்தார். அந்த வகையில் வார்னருக்கு சரியான மாற்றாக அவர் அமைந்துள்ளார். அதையே தற்போது வார்னரும் வழி மொழிந்துள்ளார். அவரது கிரிக்கெட் கேரியரில் கசப்பான சில நிகழ்வுகள் இருந்தாலும் சாம்பியனாகவே அவர் சர்வதேச களத்தில் இருந்து விடைபெறுகிறார் என்பதை மறுப்பதற்கு இல்லை.