ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11-வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை சிட்டி எஃப்சி, மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள விவேகானந்தர் யுவ பாரதி கிரிரங்கன் மைதானத்தில் நடைபெறுகிறது. மோகன் பகான் அணி கடந்த சீசனில் 2-வது இடம் பிடித்திருந்தது.
ஐஎஸ்எல் தொடரில் மோகன் பகான் அணி, மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் மோகன் பகான் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான சாதனையை மாற்றுவதற்கான முயற்சியில் மோகன் பகான் அணி செயல்படக்கூடும்.
மும்பை சிட்டி அணி புதிய கேப்டனான லாலியன்சுவாலா சாங்டே தலைமையில் களமிறங்குகிறது. 2023-24-ம் ஆண்டு சீசனில் லாலியன்சுவாலா சாங்டே 10 கோல்கள் அடித்திருந்தார். இதனால் இந்த சீசனில் அவர், மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மோகன் பகான் அணியில் முன்னணி நட்சத்திரமாக ஜேசன் கம்மின்ங்ஸ் திகழ்கிறார். கடந்த சீசனில் அறிமுக வீரராக களமிறங்கிய அவர், 11 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். இன்றைய போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோசினிமா செயலியில் நேரலையில் காணலாம்.