துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘சி’ – இந்தியா ‘பி’ அணிகள் இடையிலான ஆட்டம் அனந்தபூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘பி’ பீல்டிங்கை தேர்வு செய்ததது.
முதலில் பேட் செய்த இந்தியா ‘சி’ அணி முதல் நாள் ஆட்டத்தில் 79 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 126 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த பாபா இந்திரஜித் 136 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 78 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது.
துலீப் டிராபியின் முதல் சுற்றில் இஷான் கிஷன் இந்தியா ‘டி’ அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர், விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். இதையடுத்து ‘சி’ அணியில் மாற்றம் செய்யப்பட்டு இஷான் கிஷன் உள்ளே கொண்டுவரப்பட்டார். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அவர், சரியாக பயன்படுத்திக் கொண்டார். நவ்தீப் சைனி பந்துகளில் 2 சிக்ஸர்களையும், முகேஷ் குமார் பந்தில் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டு அசத்தினார் இஷான் கிஷன்.
முன்னதாக, தொடக்க வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் 43, ரஜத் பட்டிதார் 40, அபிஷேக் பொரல் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46, மனவ் சுதார் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்தியா ‘பி’ அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்கியிருந்தார். ஆனால் 2 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், காயம் காரணமாக வெளியேறியிருந்தார். எனினும் இஷான் கிஷன் ஆட்டமிழந்ததும் ருதுராஜ் களமிறங்கி அணியை முன்னெடுத்துச் சென்றார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.