காஷ்மீர் குளிரில் தீவிரப் பயிற்சி: 2-வது வாய்ப்பை தக்க வைப்பாரா சர்ஃபராஸ் கான்?

0
27

இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சர்ஃபராஸ் கான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “நான் இந்த அமைப்பில் பொருந்திப்போகாமல் இருக்கலாம். ஆனால், என்னிடம் இருக்கும் அத்தனை பலத்தையும் கொண்டு கடைசி வரை போராடுவேன்!” எனக் கூறியிருந்தார்.

அது வெறும் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் மட்டுமல்ல. அன்றைய சூழலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அவருக்கான வாய்ப்புகள் எவ்வளவு மங்கலாக இருந்தன என்பதை உணர்ந்து வெளிப்படுத்திய தீர்க்கமான பதிவு. ஆனால், அவரது விடாமுயற்சியும் உழைப்பும் இறுதியில் வென்றுள்ளன.

இலங்கை டெஸ்ட் தொடக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சாய் சுதர்சனுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான காயம், கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்ஃபராஸ் கான் காத்துக் கொண்டிருந்த வாய்ப்புக் கதவை சட்டெனத் திறந்துள்ளது. வரும் 15-ம் தேதி அன்று தொடங்கவுள்ள இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 17 கிலோ உடல் எடையைக் குறைத்து, தன் உடற்தகுதியை முற்றிலும் மாற்றியமைத்துள்ள மும்பையை சேர்ந்த சர்ஃபராஸ் கானுக்கு இந்த அழைப்பு சரியான தருணத்தில் கிடைத்துள்ளது. ரஞ்சி கோப்பையில் முச்சதம் அடித்து சாதனை படைத்தபோதிலும், சர்வதேச கிரிக்கெட்டுக்கு சற்று பருமனானவர் என்ற விமர்சனம் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய உடற்தகுதி அவரது பேட்டிங் வேகத்தையும் டி20 ஆட்டத்திறனையும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ஐபிஎல் தொடருக்குப் பிறகு, மும்பை டி20 லீக் போட்டிகளில் பங்கேற்ற சர்ஃபராஸ் கான், ‘ஆகாஷ் டைகர்ஸ் வெஸ்டர்ன் மும்பை சர்பர்ப்ஸ்’ அணிக்காக அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தினார். ஆனால் மும்பையில் பருவமழை தொடங்கியதும், அவர் காஷ்மீருக்குச் சென்றார். அங்கு சிறிது காலம் தங்கி, வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்கள் மற்றும் மாநில அணியைச் சேர்ந்த சில வீரர்களுக்கு எதிராகப் பயிற்சி மேற்கொண்டார்.

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தனது ஆட்டத்தை உச்சபட்ச நிலையில் தக்கவைத்துக் கொள்வதற்காக, சர்ஃபராஸ் கான் மும்பை பிகேசி-யில் உள்ள எம்சிசி உள்ளரங்க மைதானத்தில் உள்ள ஆஸ்ட்ரோ டர்ஃப் ஆடுகளத்தில் பயிற்சி மேற்கொண்டதுடன், குர்லாவைச் சுற்றியுள்ள தனியார் மைதானங்களையும் வாடகைக்கு எடுத்து சிவப்பு களிமண் ஆடுகளங்களில் மணிக்கணக்கில் பேட்டிங் பயிற்சி செய்தார்.

கடந்த 2024-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் தொடர்ந்து நான்கு இன்னிங்ஸ்களில் சோபிக்கத் தவறியதால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார் சர்ஃபராஸ் கான். அதன்பின் சோர்ந்து விடாமல் இங்கிலாந்து சென்ற இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 92 ரன்களும், பெக்கன்ஹாமில் இந்தியா – இந்தியா ‘ஏ’ அணிகள் இடையே நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் சதமும் அடித்துத் தன் திறமையை நிரூபித்தார்.

உள்நாட்டில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்திய அணி சந்தித்த தோல்வி, தேர்வுக்குழுவுக்கு எச்சரிக்கை மணிகளை எழுப்பியது. குவாஹாட்டியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே அணி நிர்வாகம் சர்ஃபராஸ் கான் குறித்து விசாரித்த போதிலும், தேர்வுக்குழு அவரை மீண்டும் சேர்க்கத் தயங்கியது.

ஆனால் தற்போது சாய் சுதர்சனின் வலது கால் பெருவிரல் காயம் குணமடையாத நிலையில், தேர்வுக்குழுவின் முன் மூன்று விருப்பங்கள் மட்டுமே இருந்தன. முதல்தர கிரிக்கெட்டில் 40 சராசரி வைத்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், 3-வது இடத்தில் களம் இறங்கும் இளம் வீரர் ஷேக் ரஷீத், சுழற்பந்து வீச்சை அபாரமாகக் கையாளும் சர்ஃபராஸ் கான் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவானது.

இவர்களில் தர்க்கரீதியான தேர்வாக சர்ஃபராஸ் கான் மட்டுமே இருந்தார். ஏனெனில், தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் கேப்டன் ஷுப்மன் கில், ரிஷப் பந்த்துக்கு அடுத்து, சுழற்பந்து வீச்சை மிகச்சிறப்பாகக் கையாளும் திறன் கொண்டவர் சர்ஃபராஸ் மட்டுமே.

மறுபுறம், துருவ் ஜூரெல் கடந்த சில காலமாகச் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகத் தடுமாறி வருகிறார். கடந்த மாதம் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டனாக இலங்கை சென்ற ஜூரெல், சதமும் அரைசதமும் அடித்த போதிலும் நேற்று முன்தினம் நிறைவடைந்த இலங்கை பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சில் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவதில் துருவ் ஜூரெலுக்கு சிக்கல்கள் இருப்பது நன்கு அறியப்பட்ட ஒன்றாகும். தென் ஆப்பிரிக்க தொடரின் போது சைமன் ஹார்மர் அவரை நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று முறை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். ஆனால் சர்ஃபராஸ் கானை பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வழக்கமான ‘ஸ்வீப்’ மற்றும் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட்களை மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் அடிக்கும் திறன் கொண்டவர்.

பல்வேறு தடைகளை தாண்டி 2-வது முறையாக அணிக்குள் நுழைந்துள்ள சர்ஃபராஸ் கான், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலே மைதானத்தில் அவருக்கு ‘சுழல்’ வலை காத்திருக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here