“சாதனைகள் முறியடிக்கப்படவே” – வித்யா ராம்ராஜுக்கு பி.டி.உஷா வாழ்த்து

0
39

நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழகத்தின் கோவையை சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜ்.

28 வயதான அவர், 400 மீட்டர் தடை தாண்டுதல் இறுதிச் சுற்றில் பந்தய தூரத்தை 54.75 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம் கடந்த 1984-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முன்னாள் இந்திய தடகள வீராங்கனை பி.டி.உஷா படைத்த 55.42 வினாடிகள் என்ற தேசிய சாதனையை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2023-ல் பி.டி.உஷாவின் சாதனையை அவர் சமன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அதை வித்யா ராம்ராஜ் தகர்த்துள்ளார். நடப்பு ஆசிய விளையாட்டு போட்டியில் அவர் வெல்லும் இரண்டாவது பதக்கம் இது. முன்னதாக, 400 மீட்டர் ரிலேவில் கலப்பு பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.

பி.டி.உஷா வாழ்த்து

“வித்யாவுக்கு வாழ்த்துகள். சாதனைகள் முறியடிக்க படுவதற்காகவே. நாம் நிர்ணயித்த எல்லைகளை அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் கடந்து செல்வதை பார்ப்பது இனிதானது. 43 ஆண்டுகளுக்கு முன்பு நான் படைத்த தேசிய சாதனையை வித்யா தகர்த்துள்ளார். இது மிகவும் சிறப்பான தருணமாகும்.

நமது சாதனைகள் அடுத்த தலைமுறையினரை ஈர்ப்பது தான் முக்கியம். தாங்கள் சார்ந்துள்ள விளையாட்டினை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது தான் விளையாட்டு வீரர்களின் பணி” என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தெரிவித்தார்.

முதல்வர் விஜய் வாழ்த்து

“ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷா, கடந்த 1984-ம் ஆண்டு படைத்த தேசிய சாதனையை வீராங்கனை வித்யா ராம்ராஜ் முறியடித்து, தற்போது புதிய தேசிய சாதனையைப் படைத்திருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும்.

அவரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவரது வெற்றி, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.

தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகிறேன்” என்று முதல்வர் விஜய் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here