33-வது ஒலிம்பிக் திருவிழா வரும் 26-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இதில் இந்தியாவில் இருந்து 118 வீரர், வீராங்கனைகள் 16வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்திய வீரர், வீராங்கனைகளின் பயிற்சிக்கு மட்டும் ரூ.470 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் மிஷன் ஒலிம்பிக் செல்லின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தடகளத்துக்காக மட்டும் மத்திய அரசு ரூ.96.08 கோடி செலவிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளத்துக்கு ஒலிம்பிக் மேடை இலக்கு திட்டத்தின் கீழ் ரூ.5.38 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இம்முறை தடகளத்தில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் தலைமையில் 28 பேர் பங்கேற்கின்றனர்.
தடகளத்தை தொடர்ந்து பாட்மிண்டன் பயிற்சிக்கு ரூ.72.02 கோடியும், குத்துச்சண்டை பயிற்சிக்கு ரூ.60.93 கோடியும், துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு ரூ.60.42 கோடியும் செலவழிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டன் இந்தியா சார்பில்பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரனாய்,லக்சயா ஷென் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஷ்டோ ஆகியோர் இரட்டையர் பிரிவிலும் விளையாட உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் சிறப்பு பயிற்சிக்காக ரூ.41.29 கோடிவழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் வில்வித்தைக்காக ரூ.39.18 கோடியும், மல்யுத்தத்துக்காகரூ.37.80 கோடியும், பளுதூக்குதலுக்காக ரூ.26.98 கோடியும் செலவழிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக குதிரையேற்றத்துக்காக ரூ.95 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. டென்னிஸுக்காக ரூ.1.67 கோடியும், கோல்ஃப் பயிற்சிக்காக ரூ.1.74 கோடியும், படகுவலித்தலுக்காக ரூ.3.89 கோடியும், நீச்சலுக்காக ரூ.3.9 கோடியும், பாய்மர படகு விளையாட்டுக்காக ரூ.3.78 கோடியும், ஜூடோவுக்காக ரூ.6.3 கோடியும், டேபிள் டென்னிஸுக்காக ரூ.12.92 கோடியும் பயிற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் அதிகளவில் பயன் அடைந்துள்ளனர். இவர்கள் 81 முறை பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக தனிநபர் அல்லது விளையாட்டு சார்ந்த செலவினங்களைப் பொறுத்தவரை, இந்திய ஆடவர் ஹாக்கி அணி அதிகபட்சமாக ரூ.41.81 கோடியைப் பெற்றுள்ளது. இதில் 76 தேசிய பயிற்சிமுகாம்கள் மற்றும் 19 வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் அடங்கும்.இந்த வகையில் நீரஜ் சோப்ரா பயிற்சியாளர் நியமனம், வெளிநாட்டு போட்டியில் பங்கேற்பதற்காக ரூ.5.72 நிதி உதவி பெற்றுள்ளார்.