விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

0
32

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஜூலை 2-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் காவல் துறையினருக்கு சுய ஒழுக்கம் அவசியம் என்ற தலைப்பில் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த ஆலோசனையிலேயே அடுத்த மாதம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவின் போது புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் எதுவும் வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளதாக தகவல் தெரிகிறது.

தமிழகத்தில் புதிய புதிய ஜெபக்கூடங்கள், புதிய மசூதிகள் ஏற்படுத்துவதை தடை செய்வதில்லை. ஆனால் புதியதாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சில நாட்கள் மட்டும் விழா நடத்துவது இந்த அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்துவது ஏன்? திமுகவின் கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக தினம் தினம் ஏதாவது ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம் என மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி அனுமதி அளிக்கிறது திராவிட மாடல் திமுக அரசு. ஆனால் இந்துக்களுக்கு ஆதரவாக, குரல் கொடுக்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாத பல நிபந்தனைகள் இந்துக்களுக்கு விதிக்கப்படுகிறது. சாதாரண ஆர்ப்பாட்டம் முதல் முருக பக்தர்கள் மாநாடு வரை இந்துக்கள் நீதிமன்றத்தை நாடியே அனுமதி பெற வேண்டி உள்ளது. அந்த அளவு திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது.

பக்தர்களிடையே எந்த வேறுபாடுகளும் இல்லாமல் தமிழக இந்துக்களை ஒருங்கிணப்பது விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆகும். இதற்கு இப்போதே நிபந்தனைகள் விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here