“ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் இறுதியானால் நான் பாகிஸ்தான் செல்வேன்” – ட்ரம்ப்

0
106

 ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் நான் பாகிஸ்தான் செல்வேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி அமெரிக்காவும், ஈரானும் இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தன.

இரண்டு தரப்புக்கும் இடையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஏப்.11 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கால்பாஃப் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் நோக்கில் செயல்பட்டன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப் கூறியதாவது: ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை சுமுகமாக உள்ளது. இதன் முன்னேற்றம் நேர்மறையாக அமைந்துள்ளது. கூடிய விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அது நடந்தால் நான் செல்லக்கூடும். அங்கு நான் இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானின் பணி சிறப்பானது. இந்த பேச்சுவார்த்தை இப்போது சரியான திசையில் உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும், அதன் விலை குறையும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும். அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது. இதில் அணு ஆயுதமும் உள்ளடங்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதுவரை 5 அமெரிக்க அதிபர்கள் மட்டுமே தங்கள் பதவி காலத்தில் பாகிஸ்தான் சென்றுள்ளனர். கடைசியாக கடந்த 2006-ல் இஸ்லாமாபாத் நகருக்கு ஜார்ஜ் புஷ் சென்றிருந்தார். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எந்தவொரு அமெரிக்க அதிபரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here