மும்பையை விட்டு செல்ல விரும்புவதாக அனுராக் கஷ்யப் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பல்வேறு வித்தியாசமான கதைக்களங்களை இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் அனுராக் கஷ்யப். தற்போது அவருடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்போது பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது பாலிவுட் திரையுலகம் செயல்பாட்டு முறை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் அனுராக் கஷ்யப். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “செலவு என்று வரும்போது எனக்கு வெளியே சென்று புதியதொரு கதையை பரிசோதிப்பது கடினமாக இருக்கிறது. இது என்னுடைய தயாரிப்பாளர்களை லாபம் மற்றும் தொகைகளை பற்றி சிந்திக்க வைக்கிறது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அது எப்படி விற்கும் என்பதைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதனால் படப்பிடிப்பின் மகிழ்ச்சி உறிஞ்சப்பட்டு விடுகிறது.அதனால்தான், அடுத்த வருடம் மும்பையை விட்டு நான் தென்னிந்தியாவுக்குச் செல்ல விரும்புகிறேன். நான் உத்வேகம் எங்கு கிடைக்கிறதோ, அங்கு செல்ல விரும்புகிறேன்.
நான் எனது சொந்த சினிமா துறை மீதே அதிருப்தியும் அருவருப்பும் கொண்டிருக்கிறேன். அதேபோல், சினிமா உலகின் மனநிலையிலும் எனக்கு மொத்தமாக வெறுப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார் அனுராக் கஷ்யப்.